கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர். தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர். கோவை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என்று தெரிவித்தார். இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது என்றும் கூறியுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…! 
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறியுள்ளார். முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
இதையும் படிங்க: கையாலாகாத காவல்துறை... அசிங்கப்படணும் முதல்வரே..! மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்...!