காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்நிலையில் இன்று நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாடு முழுவதும் 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. நாடு முழுவதும் அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள் முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இந்த இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட SCALP ஏவுகணை.. இதன் துல்லியத்துக்கு இதுதான் காரணமா?

தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். போர்க்காலத்தில் மக்கள் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்கள் எவ்வாறு மறைவான இடங்களில் ஒளிந்து கொள்ள வேண்டும், எவ்வாறு தப்பிச் செல்வது, பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்வது எப்படி என்பது இந்த ஒத்திகையில் நடத்திக் காட்டப்பட்டது.

வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல், கடுமையான தாக்குதல் நேரத்தில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இன்று பயிற்சி செய்யப்பட்டது. மேலும், போர் காலத்துக்கு பதுங்குமிடங்களைத் தயார்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின் கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளர்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு, மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயார் நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற்றன.
இதையும் படிங்க: என் குடும்பமே போச்சு.. நானும் போயிருக்கனும்; கதறும் மசூத் அசார்!!