தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை முன்னிட்டு அரசியல் களம் சூடேறி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை சுற்றி அவர் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அவர் தெரிவித்ததாவது, இதுவரை தேர்தல்களில் தனித்தனி நபர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதையே பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த தெருவையே விலைபேசும் நிலைமை உருவாகியிருக்கிறது. அமைச்சர்கள் உட்பட பலர் இந்தப் பணப் பட்டுவாடாவில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. முன்பு எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு அமைச்சர்கள் தெருக்களில் முகாமிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது வெறும் வாக்காளர்களை மட்டும் அல்ல, தெருக்களையும் ஊரையுமே விலைபேசுவதாகும்.ஒவ்வொரு வாக்கிற்கும் ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் செல்போன்களை எடுத்துப் பார்த்தால் உண்மை தெரியும். போன் பே, ஜிபே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் மூலம் பணம் பரிமாற்றம் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கையில் பணம் கொடுப்பதைவிட டிஜிட்டல் முறைகள் மூலம் இது நடைபெறுவதால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்குகளை எண்ணி பார்த்து பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொள்கைகளைப் பேசாமல் எந்த வீட்டில் எத்தனை வாக்குகள் இருக்கின்றன, ஒரு வாக்கிற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று கணக்குப் போடும் வேலையிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் விமர்சித்தார். இது அறநெறியற்ற அரசியல் என்றும் ஜனநாயகத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் எச்சரித்தார்.மேலும், இந்த இடைத்தேர்தலில் கோவில் கட்ட வேண்டுமா, பள்ளிக்கூடம் வேண்டுமா என உறுதிமொழிகளை வழங்கி ஓட்டு கேட்பதும் ஊரையே விலைபேசுவதற்கு சமம் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!
இவை அரசின் கடமைகள். தேர்தல் நேரத்தில் இப்படிப் பேசுவது சரியல்ல என அவர் சுட்டிக்காட்டினார். வாக்குச்சீட்டு என்பது நீண்ட போராட்டத்தின் மூலம் பெற்ற உரிமை. அதை விலைபேசுவதும் விலைக்கு வாங்குவதும் பெரும் குற்றம் என அவர் வலியுறுத்தினார்.இடதுசாரி கட்சிகள் இந்தத் தேர்தலில் கொள்கை அடிப்படையில் களம் இறங்கியிருப்பதாகவும், பணம் கொடுக்காமல் மக்களிடம் வாக்குச்சீட்டின் மதிப்பை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் இந்தப் பண அரசியலை நிராகரித்து சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து சிக்கும் பணம்..! தேர்தல் பறக்கும் படை அதிரடி..!