தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான தேவா இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 75. நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
1980களின் நடுப்பகுதியில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான அவர், ‘மட்டுக்கார மன்னாரு’ படத்தின் மூலம் முழுமையான இசையமைப்பாளராக அங்கீகாரம் பெற்றார். அதைத் தொடர்ந்து ‘வைகாசி பொறந்தாச்சு’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அவரது இசை பெரும் பங்காற்றியது. குறிப்பாக கானா பாடல்களை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியதில் தேவாவின் பங்கு முக்கியமானது.

தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தேவா இன்று காலை உயிரிழந்தார். இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன் என கூறினார்.
இதையும் படிங்க: ஷாக்..! இசையமைப்பாளர் தேவாவுக்கு என்ன ஆனது.? மருத்துவமனை விளக்கம்.!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்தார்.
இசையமைப்பாளர் தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!