தமிழ்நாடு அரசு, மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், 2025 பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. இவை பொதுப்பெயர் ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை. ஆனால், இத்திட்டம் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் (ஜன ஔஷதி) திட்டத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். 75% தள்ளுபடியுடன் ஜெனிரிக் மருந்துகள் கிடைக்கும் என திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்வர் மருந்தகங்களில் தோல் நோய் சம்பந்தப்பட்ட மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்.

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஜெனிரிக் மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக விற்கப்படுவதாகவும், ஆனால் முதல்வர் மருந்தகங்களில் வெறும் 300 வகை மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அதிலும் விற்பனையாகாத மருந்துகள் தான் அதிகளவில் உள்ளதாகவும் மக்கள் கூறுவது, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசுத் திட்டங்கள் மீது வேக வேகமாக திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதில் முனைப்புடன் செயலாற்றும் ஆளும் அரசு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கோட்டை விட்டு விடுகிறது என்பதற்கான மற்றொரு சான்று தான் முதல்வர் மருந்தகம் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசு செய்யுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. மதுரை ஆதீனத்திற்கு குரல் கொடுத்த அண்ணாமலை..!
எனவே, முதல்வர் மருந்தகங்களில் உள்ள செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காமெடி பண்ணாதீங்கப்பா... பாஜகவை திமுக எதிர்க்குதா? விளாசிய சீமான்..!