திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தீபத்தூணில் தீபமேற்றலாம் எனத் தீர்ப்பளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குட்டு வைத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் வீணாகக் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கி இருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தீபமேற்றும் தமிழர் பண்பாட்டை முடக்க கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் திமுக அரசு, இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தால் குட்டுப்பட்டால் திருந்தும் என்றும் எப்போது தான் தனது இந்து மத வெறுப்பைக் கைவிடும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கூவம் முகத்துவாரத்தில் நீர் மேலாண்மை கட்டடம்... துணை முதல்வர் திறந்து வைத்து சிறப்பிப்பு...!
திரும்பத் திரும்ப விழுந்தும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக பாவலா செய்கிறது திமுக அரசு என்று விமர்சித்தார். தனது பிரிவினைவாதப் போக்கிற்கு நீதிமன்றத்தில் சவுக்கடி வாங்கியது போதாதென்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களிடம் சம்மட்டி அடி வாங்கினால் தான் திமுக அரசு அடங்கும் போல., எல்லாம் இன்னும் 70 நாட்கள் தான் என்று தெரிவித்தார். எத்தனை மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்து திமுக அரசு கதறட்டும்., தமிழர் பண்பாட்டு விரோத திமுக அரசை வீழ்த்தி தீபத்தூணில் தீபமேற்றுவது 100% உறுதி என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீபத்துண் அல்ல… இதுதான் உண்மை.. சுடுகாட்டோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி..!