நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்துக்கு காவல்துறை இறுதியில் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இருசக்கர வாகனப் பயணம் முதலில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்றும் இப்பேரணியின் நோக்கம் அமைந்திருந்தது. இதற்காக ஜூலை 18ஆம் தேதியே காவல்துறை இயக்குநரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அனுமதி வழங்கப்படாமல், உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெறும்படி பதில் அளிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 30ஆம் தேதி பேரணி தொடங்கவிருந்த வேளையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பெரியார் திடலைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பேரணி ஒத்திவைக்கப்பட்டது.இந்த அனுமதி மறுப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசியல் உரிமைகளையும் அமைதியான பேரணி நடத்தும் உரிமையையும் சுட்டிக்காட்டி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரினார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது நீதிபதிகள் காவல்துறையின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கினர். பேரணியின் உள்ளடக்கம் காவல்துறையின் கவலைக்குரியதல்ல என்றும், அரசியல் அரசியலமைப்பு உரிமைகளை அடக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!
பாதுகாப்பு அளிப்பதே காவல்துறையின் கடமை என்றும், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டால் அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.பின்னர் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 22 முதல் 25 வரை பேரணியை நடத்தத் திட்டமிட்டதாக தெரிவித்தது. அதிகபட்சம் இருபது மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும் என்றும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பயணிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. பைக் ரேஸ் போன்ற செயல்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரணியின் விவரங்கள், வழித்தடம், வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பும் புதிய மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது.இந்தப் பின்னணியில் உயர் நீதிமன்ற விசாரணை தொடர்ந்த நிலையில், காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!