நடப்பாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பிரபல பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கரை சிபிஐ நேற்று கைது செய்தது. இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் தோற்றனர். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பின்னர் வெளியானது. மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட வினாத்தாள் அதிக விலைக்கு ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஐ விசாரணையில், ஏப்ரல் 23 அன்று அதாவது தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே சிவராஜ் மோதி மோசடி நெட்வொர்க்கிடம் இருந்து வினாத்தாளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. அவரது மொபைல் போனில் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

சிவராஜ் ரகுநாத் மோதி ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் சைக்கிளில் சென்று தனியார் டியூசன் வகுப்புகள் நடத்தி வந்த அவர், பின்னர் லத்தூரில் வெறும் 10 மாணவர்களுடன் சிறிய அறையில் ஆர்.சி.சி. பயிற்சி மையத்தைத் தொடங்கினார். தற்போது புனே, நாசிக், சோலாப்பூர், கோலாப்பூர் உள்ளிட்ட ஏழு நகரங்களில் கிளைகளுடன் 40,000 மாணவர்கள் பயிலும் பிரம்மாண்ட நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது. இந்த மையம் ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக புனேவைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி கைது செய்யப்பட்டார். நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று ரகசிய வகுப்புகள் நடத்தியதும் தெரியவந்தது.
இந்த பெரும் மோசடி நெட்வொர்க்கில் இன்னும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், நீட் தேர்வு மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: குகூள் மேப்-பை தயவுசெஞ்சு நம்பாதீங்க!! நீட் தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்!