நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 933 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், இந்தியா மற்றும் சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீன எல்லைக்கு அருகே உள்ள ராசுவாகதி பகுதியில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் உள்ள நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் பணிபுரிந்த 933 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், சுரங்கப் பாதைக்கு வெளியே இருந்த 176 பேரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
10 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை முழுவதும் மண் மற்றும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுரங்கத்துக்குள் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், கயிறுகள் மூலமாக மட்டுமே சுரங்கத்துக்குள் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?
ராசுவாகதி நீர்மின் திட்டத்தில் 93 தொழிலாளர்களும், அப்பர் திரிசூலி-3 திட்டத்தில் 43 பேரும், சிலுமே நீர்மின் திட்டத்தில் 8 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்க நேபாள ராணுவ வீரர்களும், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுரங்கங்களின் உள்பகுதியை அடைந்து, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்க அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
திரிசூலி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த மற்றும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 11 நீர்மின் திட்டங்களின் சுரங்கங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களில், இந்தியாவுக்கு மின்சாரம் வழங்கும் 14 மெகாவாட் திறன் கொண்ட தேவிஹாட் நீர்மின் நிலையமும் ஒன்றாகும். நேபாளத்தில் உள்ள பல்வேறு நீர்மின் நிலையங்களில் இருந்து இந்தியா மின்சாரத்தை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நேபாளம் மற்றும் திபெத் எல்லையில், மலை உச்சியில் புதிதாக உருவான செயற்கை ஏரியில் தேங்கியிருந்த பெரும்பகுதி நீர் வடிந்துவிட்டாலும், 5.6 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சுமார் 140 கோடி லிட்டர் தண்ணீர் இன்னும் தேங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுவதால், நேபாள அரசு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளையே சூறையாடிய பெருவெள்ளம்... காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி... இந்தியர்களின் நிலை என்ன?