ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுச் சென்னையில் விபத்துகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறை அதிரடிப் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலைகளில் நாளை இரவு முதல் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாநகரின் முக்கிய 25 மேம்பாலங்களும் மூடப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசப் பயணங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய அதிநவீன ஏஎன்பிஆர் (ANPR) கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விபத்தில்லாப் புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்யப் போக்குவரத்துப் போலீஸார் ‘கியர்’ மாற்றியுள்ள நிலையில், வாகன நிறுத்தத்திற்கான சிறப்பு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்கு மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறை விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாளை (31.12.2025) இரவு 7 மணி முதல் கடற்கரை உட்புறச் சாலைகள் முற்றிலும் மூடப்படும்; அங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. மேலும், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!
அடையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தவெளி வழியாகத் திருப்பி விடப்படும். அதேபோல், பாரிஸ் மற்றும் டாக்டர் ஆர்.கே.சாலையிலிருந்து வரும் வாகனங்களும் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய 25 மேம்பாலங்களும் நாளை இரவு 10 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 6 மணி வரை அனைத்து விதமான போக்குவரத்திற்கும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் 6-வது அவென்யூ உள்ளிட்ட முக்கியமான சாலைகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தத் தீவுத்திடல், பொதுப்பணித்துறை மைதானம், கலைவாணர் அரங்கம் மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 16 இடங்களில் பிரத்யேக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க சிசிடிவி மற்றும் ஏஎன்பிஆர் கேமராக்கள் பயன்படுத்தப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், பைக் சாகசங்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கேமராக்கள் மூலம் தானாகவே கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்போடு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான புத்தாண்டை உறுதி செய்யச் சென்னை மாநகரமே தயார் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!