நெல்கட்டும்செவல்: தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும், அதற்கான காலம் தானாகவே கனியும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிரதமராக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வி.கே.ராஜு மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் முறையாக அளவீடு செய்யப்படாமல், உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தப்படாமல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பான முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை சோதனைகளில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!
மேலும், திமுக அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு, வசூலில் ஈடுபட்டதாகவும் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பில் பதில் எதுவும் வெளியாகவில்லை.

தற்போதைய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் தவறுகளை கண்டறிந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கனிம வளங்களை அரசால் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் முடிந்த பிறகு சில கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, விஜய் பிரதமராக வேண்டும் என்ற கருத்துகள் எழுந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆண்டு பல ஊடகங்கள் விஜய் முதல்வராக முடியாது என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டபோதும், விஜய்தான் முதலமைச்சராக பதவியேற்பார் என தாங்கள் உறுதியாக கூறியதாக தெரிவித்தார்.
அதேபோல், தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் தங்களுக்கு இருப்பதாகவும், அதற்கான வாய்ப்பு காலம் வரும்போது தானாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதனால் விஜயின் அரசியல் பயணம் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் செல்லுமா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!