தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வித நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிவிடவில்லை என்றும், அரசு என்ன தவறுகள் செய்தாலும் வேடிக்கை பார்ப்போம் என்ற நிலைக்கு ஒருபோதும் செல்ல மாட்டோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனத்தில் வாழ்நாள் சேமிப்புப் பணத்தை இழந்து தவிக்கும் 6,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்கள் தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி முன்னெடுத்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் சுமார் ₹600 கோடி அளவுக்குப் பிரம்மாண்ட நிதி மோசடி நடந்துள்ளது. பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இடைக்கால குற்றப்பத்திரிகையோடு விசாரணை ஆமை வேகத்தில் நகர்வது வேதனையளிக்கிறது.
இதையும் படிங்க: விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!
முக்கிய நபரான தேவநாதன் கடந்த 6 மாதங்களாகத் தனியார் மருத்துவமனையில் சொகுசு வசதிகளை அனுபவித்து வருகிறார்; அரசு வழக்கறிஞரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. வழக்கில் தொடர்புடைய பினாமிகள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை; நிரந்தர நீதிபதியும் இல்லாததால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பணத்தைத் திரும்பப் பெறாமலேயே மடிந்து வருகின்றனர் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தவெகவுடனான நிலைப்பாடு குறித்து விளக்கிய அவர், தவெக அரசுக்கு நாங்கள் வழங்கியது நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது. மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவும், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குச் சமரசமற்ற கடுமையான எதிர்ப்பும் தொடரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்த அரசியல் கூட்டணியிலும் அங்கமாக இல்லை; தவெகவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் இடதுசாரிகள் தனித்தே களம் காண்கிறோம்.
மேலும், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ விவகாரத்தில், கடந்த 2013 மற்றும் 2025 காலகட்டங்களில் புகார்கள் எழுந்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் தப்ப விட்டவர்கள் யார்? எனவே வீரமணியோடு விசாரணையை முடிக்காமல், குற்றங்களை மூடிமறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அழுத்தங்களைக் கொடுத்த அரசியல் புள்ளிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று ஆவேசமாக முழங்கினார்.
இறுதியாகத் தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத விசித்திரமான கூத்து.
சம்பந்தப்பட்ட தலைவர்களின் விருப்பமின்றி இது நடந்திருக்க முடியாது என்றாலும், அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பிற கட்சித் தலைவர்களின் பெயர்களைத் தவெக பட்டியலில் இணைத்து வழங்கும்போது, தேர்தல் ஆணையம் அதனை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு அனுமதித்தது என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்..! தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு.!!