மீனாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கண்ட வரலாற்றுப் பெருமைமிக்க மாமதுரையில் குற்றச் சம்பவங்களும் கொலை வெறியாட்டங்களும் நாளுக்கு நாள் எல்லைமீறி வருவதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய் நடித்த திரைப்படப் பாடலைச் சற்று மாற்றி, 'மதுரைக்குப் போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்' என்றுதான் தற்போதைய மதுரையின் நிலையைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
தென் தமிழகத்தின் முக்கிய நகரான மதுரையில் அண்மைக்காலமாகப் பட்டப்பகலில் நடைபெறும் அரிவாள் வெட்டு மற்றும் படுகொலைச் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரும் பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, கடந்த வாரம் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொடூரக் கொலைச் சம்பவங்களின் அதிர்ச்சி விலகுவதற்குள், நடப்பு வாரத்தின் முதல் நாளான இன்றே அலங்காநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் தற்போதைய பதற்றமான சட்டம் - ஒழுங்கு நிலவரத்தைக் கடுமையாகக் கண்டித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது பதிவில், கும்பாபிஷேகம் கண்ட மாமதுரையின் சமீபத்திய நிலையைப் பார்த்தால், முதல்வர் விஜய் நடித்த திரைப்படப் பாடலை கொஞ்சம் மாற்றி, 'மதுரைக்குப் போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்' என்றுதான் பாடத் தோன்றுகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 3 கொலைகள்; இந்த வாரம் முதல் நாளே அலங்காநல்லூரில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டுச் செய்தியுடன் தொடங்கியிருக்கிறது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு!
மேலும் ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்துக் கவலை தெரிவித்த அவர், மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கு அடியோடு செயலிழந்து போயுள்ளது. குற்றச் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாக வாழும் வகையில் ஒட்டுமொத்த மாநிலத்திலும் அமைதி எப்போது திரும்பும் முதலமைச்சர் அவர்களே? என்று நேரடியாகக் கேள்வி எழுப்பித் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!