தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வடமாநில பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் ரயில்களில் அத்துமீறி ஏறி, பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தடுக்க, தெற்கு ரயில்வே போலீசார் முறையான கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசாருக்கு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளதையொட்டி, கோவை, திருப்பூர், சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வட இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு பயணிகள் புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, திருப்பூர் பகுதிகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் நிலையங்கள் கூட்ட நெரிசலால் திணறுகின்றன.
இதையும் படிங்க: எண்ணூரில் சோகம்.. திடீரென சரிந்து விழுந்த சாரம்.. 9 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!
கடந்த ஆண்டு போன்றே, இந்த ஆண்டும் ரயில்கள் நிரம்பி வழிவதால், பயணிகள் அத்துமீறி ஏறி, இடங்கள் இல்லாமல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. முன்பதிவு செய்யாமல் இருந்த பயணிகள் பலரும், துணி மூட்டைகள், பைகளுடன் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் ஏறியதால், முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் கடும் அவதி அடைந்தனர்.
பண்டிகைக்கு முன் ரயில் பயணிகள் அதிகரிப்பு இயல்பானது. ஆனால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அத்துமீறி ஏறுவதைத் தடுக்க வேண்டும். டிக்கெட் சோதனை, கூட்ட நிர்வாகம் ஆகியவற்றை முறையாகச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு, ரயில் நிலையங்களில் போலீஸ் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசும் பயணிகள் வசதிக்காக 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. இருப்பினும், ரயில்கள் மூலம் பயணம் செய்ய விரும்பும் வடமாநில பயணிகள் அதிகம். கோவை ரயில் நிலையத்தில் மட்டும் தினசரி 50 ஆயிரம் பயணிகள் கூடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காவல்துறை, 48 ஆயிரம் அதிகாரிகளுடன் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நிர்வாகத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், பயணிகள் டிக்கெட்டை முன்கூட்டியே புக் செய்யுமாறும், கூட்ட நெரிசலில் தவறாமல் போலீஸ் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியை அனைவரும் பாதுகாப்பாக அனுபவிக்க, அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் இதை எடுத்து சென்றால் ஜெயில் கன்ஃபார்ம்..!! தெற்கு ரயில்வே வார்னிங்..!!