தமிழ்நாட்டில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. மதுபான பாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) கூடுதலாக ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வையாகச் சேர்க்கப்படுவதுடன், ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கும்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா:
தற்போது காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ், மதுபானம் வாங்கும்போது ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை மீண்டும் அதே கடையில் ஒப்படைக்கும்போது அந்தத் தொகை நுகர்வோருக்குத் திரும்ப வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் புதிய ரூல்ஸ்..! கேஷ் கொடுக்க முடியாதா.? முக்கிய அறிவிப்பு..!!
இந்த நிலையில், நவம்பர் 1 முதல் காலி பாட்டில்களுக்கான ரூ.10 தொகை மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே சேர்க்கப்பட உள்ளது. இதனால் மதுபானம் வாங்கும்போது தனியாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. அதேநேரத்தில், காலி மதுபான பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கும் நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்கும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு கூடுதல் தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மற்றும் அதைக் கண்காணிக்கத் தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை குறித்து அனைத்து மதுபானக் கடைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை:
இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளில் பணமில்லாப் பரிவர்த்தனையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே பரிவர்த்தனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால், ரொக்கமாகப் பணம் செலுத்த முடியாது. UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
அடுத்தகட்டமாக, 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த வரம்பு ரூ.500 ஆகக் குறைக்கப்பட உள்ளது. அதாவது, ரூ.500-க்கு மேல் மதுபானங்கள் வாங்கினாலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் கடைகளிலும் இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடையிலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட POS இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்யவும், பழுதடைந்த இயந்திரங்களை உடனடியாகச் சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்களின் தனிப்பட்ட UPI கணக்குகள் அல்லது வங்கிக் கணக்குகள் வாயிலாக விற்பனைத் தொகையைப் பெறக்கூடாது என்றும், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இணையவழி மதுபான முன்பதிவு முறை நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது கடைகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் படிப்படியாகக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பணத்தைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பது, கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுப்பது, விற்பனையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது, மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதைத் தடுப்பது ஆகியவை இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகின்றன
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் 4 புதிய பீர் வகைகள்! ஆரம்ப விலை ரூ.250? தீபாவளிக்குள் விற்பனை தொடக்கம்?