ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார்.
இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

தமிழகத்தில் பாஜக தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த முயலும் நிலையில், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை முக்கிய கூட்டணி பங்காளியாக கருதியது. இதனால், ஓபிஎஸ்-இன் அணியை புறக்கணிப்பது, பாஜகவின் பரந்த அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக இபிஎஸ்-உடன் நெருக்கமாக செயல்படுவதாகவும், ஓபிஎஸ்-ஐ தவிர்ப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: விஜய்க்கு குட்டு... கூட்டணிக்கு வேட்டு... அதிமுகவுக்கு தூது... ஒரே நேரத்தில் ஓங்கியடித்த ஓபிஎஸ்...!
இந்த சூழ்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. விஜய் உடன் கூட்டணி இல்லை என ஓ பன்னீர்செல்வம் இதுவரை மறுக்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.
அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்பதாக கூறினார். பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சருக்கு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!