தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 29ம் தேதி அன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனை ஆன்லைனில் வேகமாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் இருந்து உற்பத்தியாகும் பட்டாசுகள் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு, பசுமை பட்டாசுகள் மற்றும் மயில், கிரிக்கெட் பேட் போன்ற புதிய வடிவிலான பட்டாசுகள் அதிகளவில் அறிமுகமாகியுள்ளன. ஆனால், ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடிகள் அதிகரித்துள்ளதாக காவல் துறையும் சைபர் குற்றப்பிரிவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 80% தள்ளுபடி எனக் கூறி விளம்பரங்கள் பரவுகின்றன. இவற்றை நம்பி பணம் செலுத்திய பலர், பட்டாசுகள் டெலிவரி செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். 2024-ல் மட்டும் 17 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆன்லைன் விற்பனைக்கு தனி உரிமம் இல்லாததால், இத்தகைய மோசடிகள் அதிகரிக்கின்றன.
இதையும் படிங்க: இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!! உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்..
பாதுகாப்பான ஆன்லைன் வாங்குதலுக்கு, நம்பகமான இணையதளங்களை மட்டும் பயன்படுத்தவும், விற்பனையாளரின் உரிமம் மற்றும் முகவரியை சரிபார்க்கவும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதால், இவற்றை தேர்ந்தெடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு கருதி, பட்டாசு விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ஆன்லைன் தளங்களில் பட்டாசு விற்பனை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம் எனவும், இதை மீறினால் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், உயர் நீதிமன்றம், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து கவலை தெரிவித்தது.
பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைன் தளங்களில் விற்கப்படும் பட்டாசுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும், முறையற்ற விற்பனையை தடுக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், பட்டாசு வாங்கும் முன் உரிமம் பெற்ற விற்பனையாளர்களை அணுகவும், ஆன்லைன் விற்பனையில் ஈடுபடுவோர் சட்ட விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது உரிமை ஆனா... கட் அண்ட் கறாராக கட்டுப்பாடுகளை விதித்த மதுரை ஐகோர்ட்...!