இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) திரு. ஞானேஷ்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, இண்டியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடியாகப் பதவி நீக்கத் தீர்மான (Impeachment Motion) அறிவிப்பை வழங்கியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் வரலாற்றிலேயே தலைமை ஆணையருக்கு எதிராக இத்தகைய தீர்மானம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மக்களவையைச் சேர்ந்த 130 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 63 உறுப்பினர்கள் என மொத்தம் 193 எம்.பிக்கள் இந்தத் தீர்மான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த எம்.பி சௌகதா ராய் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்தார்.
ஆணையருக்கு எதிராக 7 முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆளும் பாஜக-வுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுதல். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 'சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த' (SIR) பணியில் லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்களை நீக்கியது. தேர்தல் மோசடிகள் குறித்த புகார்களின் மீதான விசாரணையைத் தடுத்தது.
இதையும் படிங்க: வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், இது இரண்டாவது பெரிய அரசியல் மோதலாகப் பார்க்கப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால், உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதே கடினமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இரு அவைகளிலும் இதற்காகத் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் இந்தத் தீர்மான அறிவிப்பு மார்ச் 13-ஆம் தேதி முறைப்படி அவைத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!