தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு மீது எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு தொடர்பான குறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை.
இந்தப் பிரச்சினைகள் தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் செயல்பாட்டைப் பாதிப்பதாகவும், நோயாளிகளுக்கு தரமான சேவையை வழங்குவதில் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்பாத திமுக அரசுக்கு ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழையெளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்றால் அனைத்து மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளர், தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும் என்று கூறிய அவர், மருத்துவ உபகரணங்கள், குளிர்பதன வசதி, மாத்திரைகள் போன்றவை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் மருந்தாளர் காலிப் பணியிடங்களே நிரப்பப்படாத அவல நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டினார்.
மருத்துவமனையைத் தேடிச் சென்றாலே மருந்து இல்லை என்கின்ற நிலையில், இல்லம் தேடி மருத்துவம் என்று தி.மு.க. அரசு விளம்பரப்படுத்திக் கொண்டு வருவது நகைப்புக்குரியதாக உள்ளது என்றும் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்றும் தி.மு.க. அரசுக்கு மக்கள்மீது அக்கறை இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தனிக்கட்சி... தவெகவுடன் கூட்டணி... ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்!