தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டுமென்ற நோக்கத்தினை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 1,173 வீட்டு வசதி சங்கங்களில், 680 வீட்டு வசதி சங்கங்கள் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சங்க உறுப்பினர்களின் வீட்டு வசதித் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3வது முறை முதல்வரை சந்தித்த OPS... ஒரு வேளை அப்படி இருக்குமோ? வலுக்கும் விமர்சனங்கள்
இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்ததாகவும், கடைசியாக 2023 ஆம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், தற்போது நிலுவையிலுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும், அனைவரும் அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி உள்ளிட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, நிலுவைத் தொகையை சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க முடியாத நிலை உள்ளதாகவும், புதிய கடன்கள் வழங்க இயலாத நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, பெரும்பாலான சங்கங்கள் செயல்பட முடியாமல் முடங்கி போய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு