பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான மிக முக்கியமான ஒரு நிலம் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலம் பழனி கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இலவச பார்க்கிங் இடமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
1888ம் ஆண்டு ஒரு தான சீட்டு மூலம் இந்த நிலம் கோவில் முட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தில் இந்த சொத்து கோவில் பராமரிப்பு, மத நிகழ்வுகள் மற்றும் பக்தர்களுக்கான சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், தனிநபர் சொத்தாக விற்கவோ இடமாற்றம் செய்யவோ கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலம் நீண்ட காலமாக சட்டப் போராட்டத்தின் மையமாக இருந்து வருகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் பழனி கோவில் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

பழனி கோயில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறினார். மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே சொல்லலாம் என்று கூறியுள்ள சண்முகம், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வர்த்தகப் போர் தீவிரம்..!! கனடா பொருட்களுக்கு 50% வரி விதித்து டிரம்ப் அதிரடி..!!
இந்த அரசுக்கு நேரடியாக இதில் சம்பந்தம் இருக்கிறது என்றும் அமைச்சர்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அந்த மாதிரியான எந்த விவரங்களும் வரவில்லை எனவும் தெரிவித்தார். மாறாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை ஏமாற்றி, பத்திரப் பதிவுத்துறை தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை கொண்டு வந்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம் என்றும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்தம்பித்தது தலைநகரம்... கொட்டும் மழையிலும் விட்டுக்கொடுக்காத ’கரப்பான் பூச்சிகள்’... திணறும் போலீஸ் படை...!