திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான இடங்களில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபரீதம் ஏதும் நடக்கும் முன் இவற்றை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சமீபகாலமாக அரசியல் விழாக்களுக்காகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இவை எவ்வித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், அலட்சியமான முறையில் நிறுவப்பட்டிருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக,பல்லடத்தின் மிக முக்கிய மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும், சாலையின் பார்வையை மறைக்கும் வகையிலும் இவை அமைக்கப்பட்டுள்ளதால், கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழி காட்டி பலகைகளை மறைத்தும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!
இவை அனைத்தையும் விட கொடுமையாக, உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்மாற்றிகளின் மிக அருகிலேயே இந்த பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசும் போதோ அல்லது மின்கசிவு ஏற்படும் போதோ, இந்த பேனர்கள் தீப்பற்றிக் கொள்ளவோ அல்லது மின் கம்பிகளில் சிக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தவோ வாய்ப்புள்ளது.
பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான பனப்பாளையம் மற்றும் மாணிக்காபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளிலும் இந்த பேனர்கள் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டுள்ளன. தரைப்பகுதியில் முறையான கிரிப் அல்லது பலம் இல்லாமல், தற்காலிகமாக முட்டுக் கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளனர். இந்த பேனர்கள் அனைத்தும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளதா? விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லடத்தில் உள்ளாட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் காட்டும் அலட்சியம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காற்று வீசிய போது பறந்து வந்த பேனர் விழுந்ததில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படும் முன், பல்லடம் நகரின் முக்கியப் பகுதிகளிலும், பனப்பாளையம், மாணிக்காபுரம் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஆபத்தாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!