சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாகப் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அதிரடியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்ற தவெக தலைமையிலான அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்தது.
இதற்கான முக்கிய அறிவிப்பினை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்த நிலையில், கடந்த வாரம் இத்திட்டத்திற்கான முறையான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனினும், கடலோரச் சூழலியல் பாதிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் உள்கட்டமைப்புச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும் இத்திட்டத்திற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: புதிய தலைமை செயலகம் அட்மினிஸ்ட்ரேஷன் சிட்டியாக அமைய வேண்டும்! பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேட்டி!

இந்நிலையில், இத்திட்டத்தை எதிர்த்துச் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதாகத் தற்போதைய தவெக அரசே வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இத்தகைய இக்கட்டான பொருளாதாரச் சூழலில், புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டுவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.1,200 கோடியை வாரி இறைப்பது தேவையற்ற வீண் விரயமாகும். மாறாக, தற்போது அரசு நிர்வாகம் இயங்கி வரும் பாரம்பரியமிக்கப் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தைப் புனரமைத்துப் புதுப்பித்தாலே அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொதுமக்களின் சிரமங்களை மனுவில் விவரித்துள்ள அவர், தற்போதுள்ள தலைமைச் செயலகமானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் பேருந்து நிலையங்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கு மிக அருகாமையில் இருப்பதால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. இதனை பட்டினப்பாக்கத்திற்கு மாற்றினால் ஏழை எளிய மக்கள் வந்து செல்வது மிகக் கடினமாகிவிடும்.
அத்துடன், வீட்டு வசதி வாரிய நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் முடங்குவதோடு, கடற்கரையை நம்பி வாழும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். இத்திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த செப்டம்பர் 12 அன்று தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை மற்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, இத்திட்டத்தைக் கைவிட உத்தரவிடுவதோடு, வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை பட்டினப்பாக்கத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!