முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பிரதமர் மோடி வழிபட்டார் பிரகதீஸ்வரர் கோவில் மண்டபங்கள் மற்றும் சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். சோழர் கால சிற்பங்கள் சோழர்களின் படை வலிமை நாணயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் வலிமையை பறைசாற்றும் செப்பேடுகளை பார்வையிட்டதுடன் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுவாமிக்கு தனது தொகுதியான வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் பிரதமர் அபிஷேகம் செய்தார். பிறகு பெருவுடையாருக்கு ஆரத்தி காண்பித்து வழிபட்டார். பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்பம் மரியாதை அளித்தனர்.

இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றதுடன் தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடி அசத்தினர். பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார். பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை பிரதமர் கேட்டு ரசித்தார். அப்போது, இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சோழ தேசத்துக்கு புறப்பட்ட பிரதமர் மோடி! கையசைத்தபடி ரோடு ஷோ... உற்சாக வரவேற்பு
பாடல் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார். சிவபுராணத்தின் 'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்ற பாடலை இளையராஜா பாடினார். இதனைத் தொடர்ந்து, சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவில் விழாவில் சாகித்திய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் வெளியிட்டார். மேலும், பகவத் கீதையின் தமிழ் இசையையும் வெளியிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை