தமிழகத்தின் தலைநகருக்கு வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முதற்கட்டமாக முடிவடைந்த பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார். இது சென்னை மெட்ரோவின் முதல் செயல்பாட்டு இரண்டாம் கட்டப் பகுதியாகும்.
மேற்கு புறநகர் பகுதிகளை நகரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த உயர்மட்ட வழித்தடத்தில் தொடக்கத்தில் 11 நிலையங்கள் மட்டும் செயல்படும். போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரையிலான இரட்டை அடுக்குப் பகுதியில் உள்ள ஆலாப்பாக்கம், காரம்பக்கம் உள்ளிட்ட ஆறு நிலையங்கள் பின்னர் திறக்கப்படும். சுமார் 15 ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பூந்தமல்லி முதல் வடபழனி வரை பயணக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.40 வரை இருக்கும். வடபழனியில் இணைப்பு மூலம் விமான நிலையம், எழும்பூர் அல்லது சென்ட்ரல் வரை செல்ல ரூ.50 ஆகும். பயண நேரம் சுமார் 30 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெரிசலான ஆர்காட் சாலை போக்குவரத்திற்கு மாற்றாக இது அமையும். தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் கலந்துகொள்ள உள்ளார். பிரதமரும் முதலமைச்சரும் ஒரே மேடையில் பங்கேற்கும் இந்நிகழ்வு, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக இரு தலைவர்களும் இணைந்து அமைந்திருப்பதால் அரசியல் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

பிரதமர் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யக்கூடும். அதே நாளில் சென்னை ஐ.ஐ.டி.யில் வேலூர் விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பரபரப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
போரூர், நந்தம்பாக்கம், சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வாரியாக கட்சியினரைத் திரட்டி வரவேற்பு அமைக்கப்பட்டுள்ளது. போரூர் நிகழ்ச்சிக்குப் பிறகு காரில் ஐ.ஐ.டி.க்கு செல்லும் வழியில் சைதாப்பேட்டை சின்னமலை முதல் கிண்டி வழியாக சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருபுறமும் கட்சிக்கொடிகளுடன் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரண்டு ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, வழித்தடத்தைப் பார்வையிட்டனர். இந்த மெட்ரோ சேவை மேற்கு சென்னையின் வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!