பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் இடம் தொடர்பான ஊடகச் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் அதைக் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
.பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த செய்தி உண்மையெனில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு அதைவிட பல மடங்கு தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு எவ்வளவு காரணங்களும் நியாயங்களும் உள்ளனவோ, அதைவிட நூறு மடங்கு அதிக நியாயங்களும் காரணங்களும் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை பட்டியலிட்டால், அதில் முதல் மூன்று இடங்களில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதி இடம் பிடிக்கும் என்றும், சென்னையின் முதன்மைச் சாலையான அண்ணா சாலை ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அதன்பின் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம் கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், அங்கு இருபது லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் அது சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!
அதுமட்டுமின்றி, பல்லவன் இல்லத்தின் தெற்கில் அண்ணா சாலை, கிழக்கில் பல்லவன் சாலை, மேற்கில் கூவம் ஆறு, வடக்கில் புனித மேரி போர்வீரர்கள் கல்லறை மற்றும் பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை இருப்பதால் எதிர்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் கூட அது சாத்தியமாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு திறந்த மனதுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே யோசனை தெரிவித்தவாறு சென்னைக்கு வெளியில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தின் தலைமைச் செயலகம்..! மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு.! பின் வாங்குமா அரசு.?