சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டிருந்த அரசியல் கருத்து வேறுபாடுகளின்போது, ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ரீகாந்தி கட்சி சார்ந்த பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ராமதாஸ்–அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனால், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த விவாதமும் பா.ம.க. வட்டாரத்தில் எழுந்தது.
இந்த சூழலில், ராமதாசுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்ட சிலரைத் தவிர, பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியின் அமைப்பு ரீதியான ஆதரவு அன்புமணிக்கு வலுப்பெற்றதாக அக்கட்சி வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “அந்த வார்த்தை இருக்கக்கூடாது...” - பாயிண்ட்டை பிடித்த பாமக எம்.எல்.ஏ. ... வார்னிங் கொடுத்த சபாநாயகர்...!
இந்த நிலையில், ஸ்ரீகாந்தி தனியாக ஒரு புதிய அமைப்பை தொடங்கி அரசியல் களத்தில் செயல்பட திட்டமிட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அன்புமணிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைப்பை தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அன்புமணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் ஸ்ரீகாந்தி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களில் பலர் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
‘ராமதாசுக்காகவே இதுவரை உங்கள் பக்கம் நின்றோம். அவர் அரசியலில் இருந்து விலகியுள்ள நிலையில், பா.ம.க.வின் வளர்ச்சிக்காக அன்புமணியுடன் இணைந்து செயல்படுவோம்’ என சிலர் தெரிவித்ததாக ஸ்ரீகாந்தி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவாளர்களை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புதிய அமைப்பை தொடங்கும் முடிவில் ஸ்ரீகாந்தி உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
ஸ்ரீகாந்தியின் புதிய அரசியல் முயற்சி நடைமுறைக்கு வந்தால், அது பா.ம.க.வின் எதிர்கால அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. குறிப்பாக, ராமதாஸ் குடும்பத்துக்குள் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு உருவாகும் புதிய அணி, பா.ம.க.வின் அடித்தள ஆதரவையும் நிர்வாகிகளின் நிலைப்பாட்டையும் எவ்வாறு பாதிக்கும் என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க: மேகதாது பெரும் பிரச்சனை..! தமிழ்நாட்டிற்கு பேராபத்து...!! பேரவையில் எச்சரித்த சௌமியா அன்புமணி..!!