தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார். அதில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
1959ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த பத்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் நாளாக இது கடைபிடிக்கப்படுகிறது. அந்த வீரத் தியாகிகளின் நினைவைப் போற்றும் இந்நாளில், நாட்டில் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டும் கடமையில் உயிரைத் தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் முதலமைச்சர் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

முதலமைச்சர் தனது பதிவில், இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பல்வேறு சூழல்களில் துணிவுடனும் விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார். கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்த அமரர் வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, கால நேரம் கருதாமல் அயராது உழைத்து நாட்டின் அரணாகத் திகழும் காவல்துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றுவோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!
இந்த நாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மயிலாப்பூர் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு செடிகளை நட்டு வைத்தார்.
இதையும் படிங்க: கெத்தாய் இறக்கப்பட்ட 40,000 போலீஸ்... திரும்பிய திசையெல்லாம் கொத்து, கொத்தாய் கைது... திணறும் டெல்லி...!