கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஹரி ஸ்ரீ(23) என்ற பிரபல ரவுடி மீது போலீசார் பதிலுக்கு சுட்டனர். இதில் இடது காலில் காயமடைந்த ரவுடி ஹரி ஸ்ரீ-யை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கோவை, பீளமேடு- விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஸ்ரீ. இவர் கோவையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். பிரபல ரவுடியான இவர், தான் பணி புரியும் மருத்துவமனையில் அவ்வப்போது விடுமுறை எடுத்து யாருக்கும் தெரியாமல் பீகார் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு கள்ளத் துப்பாக்கி வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், பீளமேடு போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஹரி ஸ்ரீ காளப்பட்டி அருகே உள்ள மதுபான பாரில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள டேபிளில் (திருச்சி மாவட்டம் மதுரபுரியை அடுத்துள்ள, துறையூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தற்போது கோவில்பாளையம் அடுத்துள்ள வழியாம்பாளையம் பகுதியில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். சக்திவேல் (24) தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த கடற்படை அதிகாரி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஹரியானா அரசு..!
அப்பொழுது ஹரி ஸ்ரீ, சக்திவேல் இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஹரி ஸ்ரீ தான் தனி ஆளாக இருப்பதாக எண்ணி, சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டும் விதமாக தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வானில் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுபான பாரில் இருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். அதில் சக்திவேல் என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் இருந்த கோவில்பாளையம் சென்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் சக்திவேல் புகார் அளித்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரவுடி ஹரி ஸ்ரீ-யை பிடித்து போலீசார் விசாரித்த பொழுது, அவர் மற்றுமொரு நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சூலூர் அடுத்துள்ள செரையாம்பாளையம் அருகே காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு போலீசாரை அழைத்துச் சென்ற அவர், திடீரென மறைத்து வைத்திருந்த அந்த நாட்டுதுப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட துவங்கி உள்ளர்.
இதனை அடுத்து கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட சொல்லி போலீசார் எச்சரித்துள்ளனர். மீண்டும் துப்பாக்கியை போலீசார் முன் நீட்டி போலீசாரை மிரட்டி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தற்காப்பிற்காக
ஹரி ஸ்ரீ-யை நோக்கி பதிலுக்கு சுட்டுள்ளார். இதில் ஹரி ஸ்ரீ-யின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. நிலை குலைந்து கீழே விழுந்த ரவுடி ஹரி ஸ்ரீ இடம் இருந்து துப்பாக்கி மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு போலீசார் காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஹரி ஸ்ரீ மீது வழக்குகள் {(s.296 (b) 109 BNS & 25(1b) a Arms Act)} பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன், சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம்- இன்ஸ்பெக்டர்கள் இன்று இரவு சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தன்னை, ஹரி ஸ்ரீ துப்பாக்கியால் சுட முயன்றதனால், தான் திருப்பி சுட்டதாகவும், அதனால் கால் பகுதியில் சுட்டதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஹரி ஸ்ரீ-யின் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!