சாலையோரத்தில் இயங்கி வந்த சிறு உணவகத்தில் கடையை மூடச் சொல்லி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் மோகன் குமார் பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோயில் பகுதியில் சாலையோரத்தில் சிறு உணவகம் ஒன்று நீண்ட காலமாக இயங்கி வந்தது. இரவு நேரத்தில் பசியுடன் வரும் பயணிகள், உள்ளூர் தொழிலாளர்கள், குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து வந்து பணி செய்யும் மக்கள் அங்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.
இரவு பத்து மணிக்கு மேல் கடை திறந்திருந்ததால், அங்கு வந்த ஒரு காவலர் கடையை மூடச் சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது. விதிமுறைகளின்படி இரவு நேரத்தில் உணவகங்கள் செயல்படக் கூடாது என்ற காரணத்தைச் சொன்னதாக கூறப்படுகிறது. உரிமையாளர் வந்தவுடன் கடையை மூடுவதாக சொல்லியும் கேட்காமல் தொழிலாளியை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில், ஈரோடு ஊரக உட்கோட்டம், காஞ்சிகோயில் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மோகன்குமார் காஞ்சிக்கோயில் 4 ரோடு அருகில் இயங்கி வரும் பாஸ்ட் புட் கடையை இரவு 10 மணிக்கு மேல் இயங்கி கொண்டு வந்ததால், இரவு காஞ்சிக்கோயில் காவல் நிலைய ரோந்து அலுவலில் இருந்த தலைமை காவலர் கடையை மூடவில்லை என்று கடையில் வேலை செய்துகொண்டிருந்த ராம்துலால் மோண்டல் என்பவரை சத்தம்போட்டு, தகாதவார்த்தையால் திட்டி, தாக்கியதாக கடையில் பதிவாகியிருந்த CCTV பதிவை கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பிரவுசிங் சென்டரில் பாலியல் தொல்லை..! போக்சோவில் உரிமையாளரை கைது செய்த போலீஸ்..!
இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, தலைமை காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார் என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள்..! பெரம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! கண்காணிப்பு தீவிரம்..!