தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் அனல் பறக்க நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி கூட்டணியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேடையிலிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 12 கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி கைகோர்த்து நின்று புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்த காட்சி, அங்கிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தனது உரையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பிரதமர் ஆவேசமாகப் பேசினார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கரங்களைப் பற்றித் தூக்கிப் பிடித்து, வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என அவர் சூளுரைத்தார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும், மேடையிலிருந்த அனைத்துத் கட்சித் தலைவர்களிடமும் தனித்தனியே கைகுலுக்கி விடைபெற்ற பிரதமர் மோடி, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 5:00 மணியளவில் தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: பராக்கிரம தினம் இன்று: நேதாஜிக்கு பிரதமர் மோடி உருக்கமான புகழஞ்சலி..!!
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!