புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமிக்கு திமுகவினர் வலியுறுத்தி உள்ளனர். கடந்த 5 கால ஆட்சியில் கல்வித்துறை மிகவும் பின்தங்கி உள்ளது. தற்போது வெளிவந்துள்ள சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளிலும் குளறுபடிகள் உள்ளது. ஒட்டு மொத்தமாக 87.42 சதவீத தேர்ச்சி ஒரு நல்ல தொடக்கமாகத் தெரிந்தாலும், புள்ளி விவரங்களுக்குப் பின்னால் ஒளிந்துள்ள ஏற்றத்தாழ்வுகளும், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையும் மிகுந்த வேதனையையும், உடனடி கவனத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
அரசு பள்ளிகள் 82.59 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது கவலைக்குரிய விஷயம். ஏனாம் பகுதி 100 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் காரைக்கால் பகுதி 81.74% தேர்ச்சியுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. காரைக்கால் அரசு பள்ளிகளில் 78.55 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சாமானிய மக்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் இன்னும் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதுவை அரசு தனிப்பயன் பயிற்சிகள் நடத்த வேண்டும் என்றும் தேர்ச்சி விகிதம் 85 சதவீதத்க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தத்தெடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் மற்றும் வாராந்திர மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலான வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மே 13-இல் புதிய அரசு: ஆளுநரிடம் அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார் ரங்கசாமி!
காரைக்கால் பகுதிக்குத் தனியாகக் கல்வி நிதி ஒதுக்கி, அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக, புதுவை முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!