புதுச்சேரி முழுவதும் தற்போது ஒருவிதமான விழாச் சூழல் நிலவுகிறது. வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் முதலமைச்சர் ந. ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்களும் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் பெரிய அளவிலான பேனர்களும் கட்அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சாதாரண புகைப்படங்கள் இல்லை. சினிமா கதாபாத்திரங்களின் தோற்றத்தில் முதலமைச்சரின் உருவத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்ட கற்பனைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.முருகப்பெருமான் போன்ற தெய்வீகத் தோற்றம் முதல் நடிகர்கள் அஜித் குமார், விஜய் ஆகியோரின் பாணி வரை பல்வேறு வடிவங்களில் ரங்கசாமியின் முகம் இணைக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்படக் கதாபாத்திரத்தின் உருவத்தில் அவர் சித்தரிக்கப்பட்டுள்ள பேனர்களும் கவனம் ஈர்த்துள்ளன. விளையாட்டு வீரர் போலவும், தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கையை அரைக்கும் காட்சியை ஒத்த வடிவத்திலும் சில பேனர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விஜய் நடித்த படங்களில் உள்ள கதாபாத்திரங்களைப் போல சித்தரிக்கப்பட்ட படங்களும் தனித்து நிற்கின்றன. இந்த வித்தியாசமான வடிவமைப்புகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. சமூக வலைதளங்களில் இவை பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

ரங்கசாமிக்குப் புதுச்சேரியில் தனிப்பட்ட செல்வாக்கு அதிகம். அவரது பிறந்தநாள் வரும்போதெல்லாம் ஆதரவாளர்கள் இப்படி விதவிதமான பேனர்களை வைத்துக் கொண்டாடுவது வழக்கமாகவே உள்ளது. இந்த ஆண்டும் அந்த மரபு தொடர்கிறது. ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நகரம் முழுவதும் இத்தகைய வாழ்த்துப் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆதரவாளர்களின் பற்றுதலையும் படைப்புத் திறனையும் வெளிப்படுத்துவதாகப் பலர் பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: அக்னி வீர்... இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்... புதுவையில் தொடக்கம்..!