சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடிந்திருக்கும் நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.518 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு முழு பொங்கல் காலத்தில் (4 நாட்கள்) விற்பனையான ரூ.725 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 3,240 பார்கள் இயங்கி வருகின்றன. இயல்பான நாட்களில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின்போது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதால் மது வாங்கும் அளவு கணிசமாக உயர்ந்தது. மேலும், திருவள்ளூர் தினத்தன்று (ஜனவரி 16) மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அதற்கு முந்தைய நாட்களிலேயே மக்கள் அதிக அளவில் மது வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: BREAKING!! சொன்னபடி துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! சீறிப்பாய்ந்தது காளைகள்! காளையர்கள் பாய்ச்சல்!!
இதன் விளைவாக, போகி பண்டிகை நாளான ஜனவரி 14-ஆம் தேதி ரூ.217 கோடி மதுபானங்கள் விற்பனையாகின. அதைத் தொடர்ந்து பொங்கல் தினமான ஜனவரி 15-ஆம் தேதி ரூ.301 கோடி என மிகப்பெரிய அளவில் விற்பனை நடைபெற்றது. இவ்வாறு இரண்டு நாட்களில் மட்டுமே ரூ.518 கோடி விற்பனை நிகழ்ந்துள்ளது.

மண்டல வாரியாகப் பார்க்கும்போது, சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு இரண்டு நாட்களில் ரூ.98.75 கோடி விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடி என அனைத்து மண்டலங்களிலும் விற்பனை சாதாரண நாட்களை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
மனமகிழ் மன்றங்களான பார்களிலும் விற்பனை உச்சத்தில் இருந்தது. ஜனவரி 14 அன்று ரூ.33.16 கோடியும், 15 அன்று ரூ.49.43 கோடியும் விற்பனையாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியும், விடுமுறை நாட்களின் விறுவிறுப்பும், மது விற்பனையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்திருந்தாலும், பொறுப்பான கொண்டாட்டத்தின் அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ராமதாஸ் தலைமையில் பாமக பொங்கல் விழா!! தைலாபுரம் வராமல் புறக்கணித்த அன்புமணி!