தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குப் லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். இதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், பயணிகளின் நெரிசலைக் குறைக்க தற்போது புதிய சிறப்பு ரயில்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06058), அதே நாளில் மதியம் 2 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கமாகத் தாம்பரத்தில் இருந்து (06057) அதே தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சிறப்பு ரயில் (06154/06153) இயக்கப்படுகிறது.
மற்றொரு வசதியாக, திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாகத் தாம்பரம் செல்ல ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (06166/06165) இயக்கப்படும். தூத்துக்குடி பயணிகளுக்காகச் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், சேலம், நாமக்கல் வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் (06151) ஜனவரி 12, 19 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாகத் தூத்துக்குடியில் இருந்து (06152) ஜனவரி 13, 20 தேதிகளில் சென்னை திரும்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பண்டிகை கால நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் இந்தச் சிறப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "தியேட்டர்ல தெறிக்கப்போகுது!" ஜனநாயகன் vs பராசக்தி -ஆன்லைனில் டிக்கெட் பிடிக்க போட்டி!
இதையும் படிங்க: “வாசலில் வரும் பொங்கல் பரிசு!” டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்! ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு அதிரடி!