திராவிட மாடல் அரசால் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி - போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட வழித்தடம் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மட்டுமல்லாது, பெருநகரில் காணப்படும் அனைத்து உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களிலும் திமுக அரசின் பெயர் சரித்திரத்தில் யாராலும் மறைக்க முடியாத இடமாக நிலைத்து நிற்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது ஜப்பான் நாட்டுக்கு நேரில் சென்று JICA நிதி உதவியைப் பெற்று அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக அரசில் மோனோ இரயில் திட்டத்தைக் கொண்டுவந்து மெட்ரோவை முடக்கப் பார்த்தபோதும், 2015 சென்னை பெருவெள்ளத்தில் மெட்ரோவின் அவசியத்தை மக்கள் உணர்ந்தனர்.
2021-ல் நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன், அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தினோம். ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத இக்கட்டான நிதி நெருக்கடிச் சூழலிலும், மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ₹11,762 கோடியும், வெளிநாட்டுக் கடனுதவி மூலம் ₹6,802 கோடியும் என மொத்தம் ₹18,564 கோடியைச் செலவிட்டு பணிகளைத் தொய்வின்றி நடத்தினோம்.
இதையும் படிங்க: செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

பிரதமரை நேரில் சந்தித்துத் தொடர் கோரிக்கைகளை முன்வைத்ததன் பலனாகவே 50:50 பங்கு மூலதன ஒப்புதல் பெறப்பட்டது. அடையாறு ஆற்றுக்கு அடியில் 300 மீட்டர் சுரங்கப்பாதை, மாதவரம் சுரங்கம் தோண்டும் பணி, கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் மேல் 108 அடி உயர மெட்ரோ பாலம் என ஒவ்வொரு கட்டப் பணிகளையும் நானே நேரில் சென்று கள ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டேன்.
2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே பூந்தமல்லி - போரூர் – வடபழனி வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். ஆனால், ரயில்வே வாரியம் சிக்னல் ஒப்புதல் வழங்குவதில் காட்டிய தாமதத்தாலும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாலும் நமது ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்க இயலாமல் போனது. இருப்பினும், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதை அறிந்து தாய்மை உணர்வுடன் பெருமை அடைகிறேன்.
1976-ல் கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தைத் திறக்க இருந்த நேரத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்த மு.க. ஸ்டாலின், அன்று முரசொலியில் கலைஞர் குறிப்பிட்ட சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல; எது நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம் என்ற வரலாற்று வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை மெட்ரோ மட்டுமல்லாமல், சென்னை மாநகரில் உயர்ந்து நிற்கும் அத்தனை நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சிச் சின்னங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!