ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின் நட்சத்திர தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து மனமாரப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என அடுத்தடுத்து மூன்று பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வீராங்கனை வித்யா ராம்ராஜ் நேரில் வருகை தந்தார். அவரை இன்முகத்தோடு வரவேற்ற ரஜினிகாந்த், அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
இதையும் படிங்க: 36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

மேலும், தான் வென்ற சர்வதேசப் பதக்கங்களை ரஜினிகாந்திடம் வித்யா ராம்ராஜ் காண்பித்துக் காட்டியபோது, அதைப் பார்த்துப் பூரிப்படைந்த ரஜினிகாந்த், அவரது அசாத்திய உழைப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டி, எதிர்கால சர்வதேசப் போட்டிகளிலும் ஒலிம்பிக் அரங்கிலும் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் எனத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆசிய விளையாட்டு நாயகி வித்யா ராம்ராஜ் ஆகியோரின் இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!