பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தனும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியானது.

இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெளியிட்ட அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் உத்தரவுப்படி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தனது குடும்பத்தையும், குழந்தையையும் கவனித்துக் கொள்வார் என்றும் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார் எனவும் இனி அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார்.,அவரது குடும்பத்துக்கு கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!
இதற்கு மறுப்பு தெரிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்னை நீக்க மாநிலத் தலைவரான ஆனந்தனுக்கு அதிகாரமில்லை. இவ்வாறு அவதூறு பரப்பிய மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர், ஆனந்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். என்னையும் குழந்தையையும் வீட்டில் இருக்குமாறும், வழக்கை மட்டும் கவனிக்குமாறும் கூறுகின்றனர். இது முறையல்ல. அப்படியானால் ஆனந்தன் எதற்கு பொறுப்பில் இருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறி பொறுப்புக்கு வந்த ஆனந்தன், ஏன் எடுத்துச் செல்லவில்லை என்றும் கேள்வியை முன் வைத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது நினைவிடம் நோக்கி கட்சித் தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பேரணி சென்றனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில், அவரது முழு உருவச் சிலையை மகள் சாவித்திரிபாய் திறந்து வைத்தார். தனது கணவனின் முழு உருவச் சிலையை கண்டு கதறி அழுதார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. இந்த நிகழ்வு காண்போரை கலங்கச் செய்தது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் அவருடைய மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார். யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வது போல் உள்ள நீளம், வெண்மை ப நிறத்திலான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கட்சிப் பெயர் கொடியை அறிமுகம் செய்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, 32 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றினார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை.. தமிழக அரசு அனுமதி.. மகிழ்ச்சியில் மனைவி..!