ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன். 1977-ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதிமுகவின் மிக நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவர். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் எட்டு முறையும், சத்தியமங்கலம் தொகுதியில் ஒரு முறையும் வெற்றி பெற்ற இவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பல முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
வனத்துறை, போக்குவரத்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வருவாய், மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. எம்ஜிஆர் காலத்தில் கட்சியின் பொருளாளராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். இதனிடையே, செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்த ஒரு மகாசங்கமம் தேவை என்று கூறினார். இந்தக் கருத்து, கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்களையும், பாஜகவுடனான கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளையும், மற்றும் சசிகலா, ஓ.பி.எஸ்., மற்றும் டி.டி.வி. தினகரன் போன்ற முன்னாள் தலைவர்களின் பிரிவு குறித்த விவாதங்களையும் மையப்படுத்தியது.செங்கோட்டையனின் இந்த அறைகூவல், கடந்த சில மாதங்களாக அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தலைமைக்கே கெடு! சம்பவம் செய்த செங்கோட்டையன்… நழுவியோடும் அதிமுக தலைகள்
செங்கோட்டையனின் கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செங்கோட்டையனை நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடிவு எனவும் தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் இன்னும் முழுசா மனம் திறக்கல… திருமா ஓபன் டாக்!