திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் ‘புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி’ இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்....
இப்பள்ளியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தலைமைய ஆசிரியராகவும், பங்குத் தந்தையாகவும் (பாதிரியார்) ஜெயராஜ் என்பவர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பள்ளி மாணவிகளிடம் அவர் வரம்பு மீறி நடக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
தனது அலுவலக அறையில் உள்ள பீரோவிலிருந்து பொருட்களை எடுத்து வரச் சொல்லி மாணவிகளைத் தனியாக அழைப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பொருட்கள் எடுக்கும் சாக்கில் பின்னாடியே சென்று தொடுவது, கன்னத்தைக் கிள்ளுவது மற்றும் முத்தம் கொடுப்பது எனத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிரியார் என்பதால் அச்சமடைந்த மாணவிகள், ஆரம்பத்தில் இதுகுறித்து வெளியில் சொல்லப் பயந்து அமைதி காத்து வந்ததாகத் தெரிகிறது....
இதையும் படிங்க: அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
இந்நிலையில், நேற்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைத் தனது அறைக்கு தனியாக வரவழைத்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அம்மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். மேலும், "இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது நாம் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கலாம்" என்று கூறி அந்த மாணவியை மிரட்டும் தொனியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அறையிலிருந்து வெளியேறிய அந்த மாணவி, வீட்டிற்குச் சென்று நடந்த கொடுமைகள் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே விரிவாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகத் தங்கள் பகுதி பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பள்ளி முற்றுகை & தப்பியோட்டம் :
சம்பவத்தைப் கேள்விப்பட்டு கொதித்தெழுந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டு வந்து, புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியை அதிரடியாக முற்றுகையிட்டனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்கள் திரண்டு வருவதை ஜன்னல் வழியாகக் கண்ட தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மக்கள் தன்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பள்ளியின் பின்புற வழியாக உடனடியாகத் தப்பி ஓடி தலைமறைவானார்.
முற்றுகைப் போராட்டம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பாதிரியாராக இருந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!