சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் நகரத்தையே அதிரவைத்தது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இந்த இரண்டு தப்பி ஓட்டங்களும் சிறைப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில், தப்பியோடியவர்களில் ஒருவரான நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகதி அண்ணா நகர் பகுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கைதியான சுரேஷை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.நேபாள நாட்டைச் சேர்ந்த 21 வயதான சுதீப் போகதி, சென்னை பாடி பகுதியில் வசித்து வந்தார்.
அவர் ஜே.ஜே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையின் வெளிநாட்டினர் பிரிவில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல கைதிகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டபோது அவர் காணாமல் போனது தெரியவந்தது. சிறை வளாகத்தில் முழு அளவிலான சோதனை நடத்தப்பட்டும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து புழல் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அவர் சிறைச் சுவரைத் தாண்டி தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அடுத்த நாள் புதன்கிழமை காலை, மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 41 வயதான சுரேஷ், பாலியல் வன்கொடுமை வழக்கில் (போக்சோ) தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நல்ல நடத்தையின் அடிப்படையில் பெட்ரோல் பங்க் பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். காலை ஏழு மணி முதல் பத்து மணிக்குள் காவலர்களின் கவனம் சிதறிய தருணத்தில் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் கலந்து மறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து போக்சோ கைதி எஸ்கேப்.! அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள்..! பரபரப்பு..!
இந்த இரண்டு தப்பி ஓட்டங்களும் சிறை நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. புழல் சிறை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரண்டு கைதிகளையும் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுவட்டாரத்திலும் தேடுதல் விரிவுபடுத்தப்பட்டது. சிறைப் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உயர் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.இந்நிலையில், தப்பியோடிய சுதீப் போகதி அண்ணா நகர் பகுதியில் சுற்றித் திரிந்தபோது காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து போக்சோ கைதி எஸ்கேப்.! அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள்..! பரபரப்பு..!