சென்னை புழல் மத்திய சிறைச்சாலையிலிருந்து தண்டனை கைதி மற்றும் விசாரணைக் கைதி என இருவர் அடுத்தடுத்து தப்பியோடிய அதிர்ச்சி சம்பவத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஜெயிலர் உள்பட 7 சிறைத்துறை அலுவலர்களைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள தண்டனைக் கைதிகள் சிறையான புழல் சிறை-1 பிரிவிலிருந்து சுரேஷ் என்ற தண்டனைக் கைதி சிறைக் காவலர்களின் பாதுகாப்பையும் மீறித் தப்பியோடினார். இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து, தலைமை வார்டர் கண்ணதாசன், கிரேடு 1 வார்டர் மணி மற்றும் கிரேடு 2 வார்டர் பிரகாஷ் ஆகிய மூன்று காவலர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறை-2 பிரிவிலிருந்து நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் என்ற விசாரணைக் கைதியும் சிறையிலிருந்து தப்பியோடிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தப்பியோடிய சுதீப்பைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். எனினும், சிறைப் பாதுகாப்பில் நிகழ்ந்த பெரும் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, புழல் சிறை-2 பிரிவில் பொறுப்பிலிருந்த உதவி ஜெயிலர் ஜோதிராமன், தலைமை வார்டர் அலெக்ஸ் கிருஷ்ணராஜ், கிரேடு 1 வார்டர்கள் குணசேகர் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! வீட்டுக்கே வரும் மளிகை பொருட்கள்?! சமூக வலைதளத்தில் புதிய ஆன்லைன் மோசடி!!
புழல் சிறையின் இரு வெவ்வேறு பிரிவுகளிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் உதவி ஜெயிலர் உள்ளிட்ட மொத்தம் 7 சிறைத்துறை அதிகாரிகள் மீது ஒரே நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறை வளாகப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெருந்துறை இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு? தவெக விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம்!