திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில், சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக் கழிவுகளுக்கு இடையே 300-க்கும் மேற்பட்ட அசல் ஆதார் அட்டைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகளுக்கு நடுவே தபால் உறைகளுடன் கூடிய ஏராளமான ஆதார் அட்டைகள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. அருகில் சென்று பார்த்த பொதுமக்கள், அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு உடனடியாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் பெரும்பாலானவை பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதியவர்கள் மற்றும் பெண்களின் ஆதார் அட்டைகளும் பெருமளவில் காணப்பட்டன.
இதையும் படிங்க: திருப்பூரில் பாய்லர் வெடித்து விபத்து..! 9 பெண்களுக்கு சிகிச்சை... பரபரப்பு..!!
அனைத்து அட்டைகளும் அஞ்சல் துறை மூலம் விநியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில், அவை முகவரிதாரர்களிடம் சென்றடையாமல் குப்பையில் வீசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குப்பையில் கிடந்த அட்டைகளை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் திருப்பூர் மாவட்டத்தின் மற்றொரு பகுதியான அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முகவரிகளைக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவிநாசி பகுதி மக்களுக்குச் சேர வேண்டிய முக்கியமான அரசு ஆவணங்கள், பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்லடம் அறிவொளி நகர் குப்பைமேட்டுக்கு எவ்வாறு வந்தன என்பது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் முக்கியமான அடையாள ஆவணங்களாக ஆதார் அட்டைகள் உள்ளன. இவற்றை அஞ்சல் துறை மூலம் விநியோகம் செய்யாமல், ஊழியர்கள் அல்லது தற்காலிகப் பணியாளர்கள் யாரேனும் அலட்சியமாகக் குப்பையில் வீசிச் சென்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை, அரசு நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை முக்கியமானதாக உள்ள சூழலில், பொதுமக்களின் அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் குப்பையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் உரிய முறையில் தீவிர விசாரணை நடத்தி, பொதுமக்களின் ஆவணங்களை அலட்சியமாக வீசியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளும் குப்பையில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.30க்கு ரேஷன் அரிசியை விற்பதா.? நூதன முறையில் ஏமாற்றும் தவெக அரசு..! டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு.!!