ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. ஒரு குழந்தைகள் நல ஆர்வலர் பென்டிரைவ் ஒன்றை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் ஆரம்ப விசாரணையில் வீடியோவில் உள்ள நபரை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி காவல்துறை வழக்கை முடிக்க முயன்றது. சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த மூடுவதற்கான அறிக்கையை நிராகரித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பிறகு தீவிர விசாரணை நடைபெற்று வீடியோவில் இருப்பது வீரமணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ஆகஸ்ட் மாத இறுதியில் வீரமணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி அளித்த விளக்கம் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் திமுக அரசுக்கு வீரமணியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். புகார் வந்த உடனேயே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வழக்கை கைவிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கருத்துகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

மருந்தளவு மனசாட்சி இருந்திருந்தால் முன்னாள் அமைச்சர் இப்படி பேசியிருப்பாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோ தெளிவாக இல்லை என்றால் எச்டி குவாலிட்டியில் வீடியோ வேண்டுமா என்றும் அவர் கேட்டார். வழக்கை கைவிடச் சொன்னது முதல்வரா அல்லது துணை முதல்வரா என்றும் தொடர்புடைய அதிகார அரசியல் முகங்களை வெளியே கொண்டு வருவது உறுதி என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.தற்போதைய அரசு இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
முதல்வர் விஜய் காவல்துறைக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து எந்த குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். விசாரணையில் வீரமணியுடன் இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் வழக்கை மறைக்க முயன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சியில் வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வருகின்றன. காவல்துறை விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் முழுமையான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் பேசினால் தப்பா..? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்..!!