தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து கடும் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் காவலராக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே இரண்டு தேர்தல் ஆணையர்கள் முக்கிய விவகாரங்களில் மீண்டும் மீண்டும் ஆட்சேபனை தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த பத்து மாதங்களில் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக குறைந்தது பதினான்கு முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை எழுப்பியுள்ளனர் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல், வாக்காளர் பட்டியல் மென்பொருள் செயல்பாடு உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களிலேயே இந்த ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, புதிய வாக்காளர்களுக்கான படிவம்-6 விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை ஒரு தேர்தல் ஆணையர் “அனுமதியற்றது, சட்டவிரோதமானது” என்று குறிப்பிட்டு, அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான மென்பொருள் மற்றும் தரவுகள் டெல்லியில் மையப்படுத்தப்படுவது குறித்து இரு தேர்தல் ஆணையர்களும் கவலை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சரவைச் செயலாளரிடமும் முறையிட்டுள்ளனர் என்று செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டினார்.

கோவாவில் தொண்ணூற்று ஏழு தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரிகளின் முடிவை மென்பொருளில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் தேர்தல் நடைமுறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாக அவர் வலியுறுத்தினார்.இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் செயல்படும் தேர்தல் ஆணையம் எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் அப்பாற்பட்டு முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டிய அமைப்பு என்று செல்வப்பெருந்தகை நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலை சேதம்..! நிரந்தர பாதுகாப்பு தேவை... செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!!
ஆனால் ஆணையத்திற்குள்ளேயே இரண்டு தேர்தல் ஆணையர்கள் முக்கிய முடிவுகள் குறித்து மீண்டும் மீண்டும் ஆட்சேபனை தெரிவித்திருப்பது தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது என்று அவர் கூறினார்.தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு நடைபெறும் நிகழ்வு அல்ல; ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையையும் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை கடமை என்று அவர் வலியுறுத்தினார். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படுவதற்கோ, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவதில் தடைகள் ஏற்படுவதற்கோ, வாக்காளர் தரவுகள் வெளிப்படையற்ற முறையில் கையாளப்படுவதற்கோ எந்தவிதமான இடமும் அளிக்கக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!