தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. சன்னரக அரிசி கிலோவுக்கு ரூ.30 முதல் 40 வரை உயர்ந்து, சில இடங்களில் ரூ.100 வரையும் விற்கப்படுகிறது. சாதாரண கிராமப்புற கூலி ரூ.500 என்ற நிலையில், அரிசிக்கே பெரும்பகுதி செலவாகும்போது குடும்பத்தை நடத்துவது கடினமாகிவிட்டது. டெல்டா மாவட்டங்களில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளே கூட தங்களது அரிசியை வாங்கி உண்ண முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் புலம்புகின்றனர்.
பருவமழை பொய்த்தது, மேட்டூர் அணை திறப்பு தாமதம், ஏற்றுமதி உள்ளிட்ட பல காரணிகள் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், இதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த தமிழக அரசு, கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகள் மூலம் சன்னரக அரிசியை கிலோ ரூ.30க்கு விற்பனை செய்வதாக அறிவித்தது. இதன்படி மாநிலம் முழுவதும் விற்பனை தொடங்கியது.

சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் இன்று விற்பனை நடைபெற்றது. ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், தவெக நிர்வாகிகளுக்கு மட்டும் 10 கிலோ அள்ளி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தூங்கும் குழந்தைக்கும் பாதுகாப்பில்ல..! இந்த காட்டாட்சிக்கு பேரு தான் நல்லாட்சியா.? வேல்முருகன் தாக்கு.!
வரிசையில் நின்று வாங்கிய அரிசியின் தரம் மோசமாக இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். “ரேஷன் அரிசியை சன்னரக அரிசி என்று சொல்லி விற்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டுடன் வாங்கிய அரிசியை திருப்பிக் கொடுத்து பணம் கேட்டதால் அங்காடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அரிசி என்பது மக்களின் அடிப்படை உணவுப்பொருள். விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு குறைந்த விலையில் விற்பனை செய்தாலும், தரம் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், உற்பத்தியை அதிகரிக்கவும், விலையை நிலையாக வைத்திருக்கவும் நீண்டகால திட்டங்கள் தேவை என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: "நாகரிகமற்ற நாராச பேச்சு"..! குதூகலிக்கும் மேயர் பிரியா..! கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா.!!