தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற உள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று பிரசித்திபெற்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் முதலில் ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. அடுத்த நாள் ஜனவரி 16-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த மூன்று பிரதான போட்டிகளுக்காக மொத்தம் 15,047 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அவனியாபுரத்தில் 3,090 காளைகள், பாலமேட்டில் 5,747 காளைகள், அலங்காநல்லூரில் 6,210 காளைகள் என பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2,415 காளைகள் அதிகம் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை!! விஷம் குடிக்க வைத்து கொன்ற கொடூரம்! கதறி அழும் தாய்!

அதுபோல வீரர்கள் பதிவு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 5,234 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவனியாபுரத்தில் 1,849 வீரர்கள், பாலமேட்டில் 1,913 வீரர்கள், அலங்காநல்லூரில் 1,472 வீரர்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 735 வீரர்கள் அதிகம் பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூரில் முதலமைச்சர் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக பார்வையிடுவதற்கு இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், ஊடகத்தினர் போட்டிகளை ரசிப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகரித்திருப்பது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உற்சாகமும், வீர உணர்வும் நிறைந்திருக்கிறது.
இதையும் படிங்க: 'சோம்நாத் சுயமரியாதை திருவிழா'!! 1,000 ஆண்டு பாரம்பரியம்!! பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!