திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியிலுள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கூடு விழா பிறை சிகப்பு கொடி, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டது. இதை எதிர்த்து தர்கா நிர்வாக தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இரவு தர்கா நிர்வாகத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் சந்தனக்கூடு விழாவுக்காக பிறை சிகப்பு கொடியை ஏற்றியிருந்தனர். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக, கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடந்து வருகிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை தொடர்ந்தும் தீபம் ஏற்றப்படவில்லை.
இதையும் படிங்க: H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் விசாரணையின்போது ஜனவரி 9-ஆம் தேதி நீதிபதி, சந்தனக்கூடு கொடி அகற்றப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு (ஜனவரி 14 இரவு) கோயில் நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து மலை உச்சிக்குச் சென்று கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கூடு பிறை சிகப்பு கொடியை அகற்றினர்.
இந்நிலையில் தர்கா நிர்வாகத்தினர் மதுரை மாவட்ட உதவி காவல் கமிஷனர் சசி பிரியாவிடம் புகார் அளித்தனர். “அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் கொடி கட்டப்பட்டது. அதை அகற்றியது தவறு. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் திருப்பரங்குன்றம் மலை பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் மற்றும் தர்கா நிர்வாகிகள் இடையேயான இந்த மோதல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மேலும் வளர்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தல விருட்சத்தில் தர்கா கொடி!! கல்லத்தி மரத்தில் முஸ்லிம் பிறைகொடி ஏற்றப்பட்டதால் வழக்கு!