தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உலகில் சிரிப்பின் ராஜாவாகத் திகழ்ந்த ரோபோ சங்கர், நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதில் இழந்த இந்தப் பெரும் நட்சத்திரம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரோபோ போன்ற நடனத்தால் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.
இளமை காலத்தில் இருந்தே நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைக்கு ஈடுபட்டார். கிராமப்புற நிகழ்ச்சிகளில் ரோபோ போன்ற நடனம் ஆடுவதன் மூலம் ரோபோ சங்கர் என்ற பெயரைப் பெற்றார். இது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது. தொலைக்காட்சி உலகில் அவர் பிரபலமானது கலக்கபோவது யாரு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி, உடல் மொழி மற்றும் மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது. அவரது திரைப்பட டயலாக்குகளில் “அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு” என்பது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

பல்வேறு திரைப்படங்களில் தனக்கென தனி பாணியை அமைத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ரோபோ ஷங்கரின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர், பேரன்பிற்குரிய தம்பி ரோபோ சங்கர உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக கூறினார்.
இதையும் படிங்க: விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி! திமுகவை எதிர்த்தால் பாஜக கைக்கூலி... என்னயா உங்க நியாயம்? - சீமான்
மக்களை மகிழ்விக்கும் தன்னுடைய தனித்துவமிக்க நகைச்சுவை திறனால் சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு, பெருங்கனவோடும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடும் தமிழ்த்திரையில் சாதித்துக்கொண்டிருந்த வேளையில், அவையனைத்தும் பொய்த்து போகும் வகையில் தம்பி ரோபோ சங்கரின் மறைவு பேரிடியாக அமைந்துள்ளது என்றார். ஏற்கனவே ஏற்பட்ட உடல்நலக் குறைவிலிருந்து தம் உள உறுதியால் மீண்டு வந்த தம்பி ரோபோ சங்கர், மீண்டும் பழையபடி தம் கலைப்பணியைத் தொடர்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தம்பியின் மறைவு தன்னை நிலைகுலைய செய்துள்ளதாகவும் சீமான் வேதனை தெரிவித்தார். ரோபோ சங்கர் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவுகள், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுப்பதாகவும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: தண்ணீர்லையே அடுப்பு எரியுமாம்! மாபெரும் கண்டுபிடிப்பு... வாழ்த்துகளை பகிர்ந்த சீமான்