கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில், ரஷ்யா தனது அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையான 'ஒரேஷ்னிக்'ஐப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது போரில் ரஷ்யா இந்த ஏவுகணையைப் பயன்படுத்தும் மூன்றாவது முறையாகும்.
நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை கீவ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ரஷ்யா பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 90 ஏவுகணைகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கீவ் நகரில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

ஒரேஷ்னிக் ஏவுகணை ரஷ்யாவின் புதிய ஆயுதங்களில் ஒன்று. இது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. விண்கல் போல் அதிவேகமாக இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, தற்போதைய எந்த வான் பாதுகாப்பு அமைப்பாலும் எளிதில் தடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது. ஒரே ஏவுகணை மூலம் 36 வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் இதற்கு உண்டு. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை தலைப்பாக்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றாலும், இந்தத் தாக்குதலில் வெடி பொருட்களை மட்டுமே சுமந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!
ஐரோப்பிய யூனியன் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “ரஷ்யா போர்க்களத்தில் முன்னேற முடியாமல் தடைபட்டுள்ளது. எனவே நகரங்களைத் தாக்கி மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாதப் போக்கை கையில் எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

உக்ரைன் தரப்பில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் புதிய ஏவுகணைப் பயன்பாடு போரை மேலும் தீவிரப்படுத்தும் என உலக நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன. உக்ரைன் மக்கள் தொடர்ந்து துணிச்சலுடன் நிற்கின்றனர். ஆனால், இந்தத் தாக்குதல்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன.
ரஷ்யா தரப்போ, இந்தத் தாக்குதல் இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாகக் கூறுகிறது. உலக அரங்கில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!